தினமணி 25.11.2009
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்: ஆம்பூரில் ஆய்வுப் பணி
ஆம்பூர், நவ.24: வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கான ஆய்வுப் பணி ஆம்பூரில் செவ்வாய்கிழமை நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்துள்ளது. வேலூர் மாநகராட்சி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் நகராட்சிகள் இத்திட்டத்தால் பயனடைய உள்ளன.
இத்திட்டத்திற்கு ஆகும் செலவுகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை சேர்ந்த உதவி நிர்வாக பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் உதவி பொறியாளர்கள் காமராஜ், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆம்பூரில் ஆரம்ப கட்ட ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக இந்த ஆய்வுப் பணி நடக்கிறது. ஆய்வுப் பணி முடிந்த உடன் ஆய்வறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்படும். அந்த அறிக்கையின் பேரில் திட்டத்திற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். திட்டம் தொடங்கினால் 3 ஆண்டுகளில் நிறைவடையும். இத்திட்டத்தின் தோராய மதிப்பீடு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி என்றனர்.