காவிரி நடுவர் மன்ற ஆணையின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு மாநகராட்சி கூட்டத்தில் முதல்வரை பாராட்டி தீர்மானம்
காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் செல்வராஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேயர் வாசித்தார்.
அதன் விவரம்: 1991 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. அதை ஏற்காமல் கர்நாடக அரசு சட்டப்பேரவையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கின் முடிவில், கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை சட்ட ரீதியாக போராடி பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவாவை விசாரிக்க நடுவர் மன்றத்தை அமைக்கிறபோது, அந்த நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினாலும், இறுதித் தீர்ப்பை வழங்கினாலும் அதை செயல்படுத்த வேண்டுமென்றால் மத்திய அரசு அதனை அரசிதழில் வெளியிட வேண்டும்.
ஆனால், 1991-இல் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு தன்னுடைய அரசிதழில் வெளியிடவில்லை. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் வழக்கு தொடுத்தது. அதன் பின்னர் தான் 1991-ஆம் ஆண்டு டிசம்பரில் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் செய்யவில்லை.
இந்த அவலநிலையைக் கண்டித்து 1993-ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் வாழ்நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த உண்ணாவிரதம் 4 நாள்கள் நீடித்தது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா சென்னைக்கு வந்து, இடைக்கால ஆணையை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த பிறகு உண்ணாவிரதத்தை முதல்வர் கைவிட்டார்.
அதன்பின் உச்சநீதிமன்றத்தை அணுகி பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடுத்தது. அதன் விளைவாக தான் காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.
ஆனால் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஒருநாளில் கூட காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய அரசு கூட்டவே இல்லை. 2011 ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை பலமுறை வலியுறுத்தினார். இதற்கு செவி சாய்க்காததால் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து 9 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்பட்டது. இந்த தொடர்ச்சியான வரலாற்று நிகழ்வுகளுக்கு இடையில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. ஆனால், இந்த தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுக்கும், மக்களுக்கும், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் எதிர்காலத்துக்கான உத்தரவாத பெற்றுத்தந்து, சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவை இம்மாமன்றம் பாராட்டுகிறது என்றார்.
துணை மேயர் சு.குணசேகரன், கவுன்சிலர்கள் க.மாரப்பன் (சிபிஎம்), தி.கல்யாணி (மதிமுக), எஸ்.ஆர். ஜெயகுமார் (அதிமுக) ஆகியோர் தீர்மானத்தை பாராட்டுப் பேசினர்.