தினகரன் 26.10.2010
கிராமப்புறங்களில் சொத்து வரி வசூல் திட்டத்தை கைவிட்டது மாநகராட்சி
புதுடெல்லி, அக். 26: நிதி நெருக்கடியை சமாளிக்க கிராமப்புறங்களிலும், நகர்ப்புறமாகும் கிராமங்களிலும் சொத்து வரியை விதிக்க மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால் அதற்கு கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமின்றி, மாநகராட்சியை ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கடும் எதிரப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பான திட்டம் பற்றி விவாதிப்பதற்காக நிலைக்குழு கூட்டம் நடந்தது. “கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஆடு, மாடு போன்ற விலங்களை நம்பி வாழ்கிறார்கள். விலங்குகளை கட்டவும், அவைகளுக்கான தீனிகளை வைக்கவும் பெரிய அளவில் இடம் தேவைப்படுகிறது. அதனால் அவர்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்கப்படவில்லையென்றால் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கிராமப்புற வாசிகளுக்கு இழைத்த அநீதியாகி விடும்” என்று கவுன்சிலர்கள் கூறினர்.
பாஜவைச் சேர்ந்த துணை நிலைக்குழு தலைவர் சரிதா சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்கிஷன் சர்மா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியாவை வலியுறுத்தினர். இதனால் கிராமப்புறம் மற்றும் வளர்ந்து வரும் கிராமப்புறங்களில் சொத்து வரியை விதிக்க வகை செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.