கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் சித்ரா பௌர்ணமி திருவிழாவும் ஒன்று. இத் திருவிழாவின் போது, பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது வழக்கம்.
எனவே, பக்தர்களின் நலன் கருதி 14 கி.மீ. தூர கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் விஜய் பிங்ளே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, திருவண்ணாமலை காந்தி சிலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நகராட்சி எல்லைக்குள்பட்ட எமலிங்கம் பகுதி வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு பெட்டிக் கடைகள், தள்ளு வண்டிக் கடைகள் உள்ளிட்டவை ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இப் பணியில் நகராட்சி நிர்வாகத்துடன் வருவாய், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை முதல் ஆணாய்ப்பிறந்தான், ஆடையூர், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகங்களுடன் வருவாய், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர்.
இம்மாதம் 25-ம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்குள், கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.