தினமணி 23.09.2009
கிழக்கு மண்டலத்தில் புதிய வரி விதிப்புக்கான சிறப்பு முகாம்
மதுரை, செப். 22: மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உள்பட்ட வார்டு எண். 49, 54, 55 ஆகிய வார்டு பகுதிகளில் புதிய வரி விதிப்புக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மேயர் ஜி. தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களுக்கு உடனடியாக வரி விதிப்பு செய்யப்பட்டது. கிரயப் பத்திரங்களின் அடிப்படையில் பெயர் மாற்றம், சுய வரி விதிப்பு மற்றும் வீட்டு வரி தொடர்பான இதர குறைகளை பரிசீலனை செய்து உடனுக்குடன் நிவர்த்திசெய்யப்பட்டது. பின்னர் ஆணையர் எஸ். செபாஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்படாமல் இருப்பதாக புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து ஏற்கெனவே மேற்கு, தெற்கு ஆகிய மண்டலங்களில் இம்முகாம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது கிழக்கு மண்டலப் பகுதிகளைச் சார்ந்த 49, 54 மற்றும் 55 வரையிலான வார்டுகளுக்காக முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வரி விதிப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய மனு செய்தனர். அந்த மனுக்களை பரிசீலித்து உடனடியாக வரி விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 10 நபர்கள் பொட்டல் வரிக்கான தொகையை கணினி வரி வசூல் மையத்தில் செலுத்தினர். பிற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மதுரை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார் ஆணையர்.
நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி, தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர் (கிழக்கு) யு. அங்கயற்கண்ணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.