தினகரன் 20.05.2010
கீழக்கரை நகராட்சி பகுதியில் ஆய்வுடன் நின்ற பாதாள சாக்கடை திட்டம்
கீழக்கரை, மே 20: கீழக்கரையில் ஆய்வு பணிகளுடன் பாதாள சாக்கடை திட்டம் நின்றுபோனது. திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் திட்டப்பணிகளை துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட சந்துக்கள் உள்ளன. சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மிக குறுகிய தெருக்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கின்றன. இதனால், கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. கீழக்கரையில் பெரும்பாலான இடங்களில் திறந்தவெளி சாக்கடையாக இருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர்அகம்மது, அமைச்சர் சுப.தங்கவேலன் முயற்சியால் பாதாள சாக்கடை திட்டம் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் கடந்தாண்டு நடந்தன.
இத்திட்டத்திற்காக ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் அரசு தரப்பில் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு, பொதுமக்கள் பங்களிப்பு தொகை எவ்வளவு போன்ற மதிப்பீடு இன்னும் தயாரிக்கப்படவில்லை. ஆய்வுப்பணிகளுடன் நின்றுபோன இத்திட்டத்தை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.
இதுகுறித்து நகர்மன்ற தலைவர் பஷீர்அகம்மது கூறுகையில், ‘கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு நடந்து வருகிறது.
அரசிடம் இருந்து பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்காக ரூ.24 கோடி நிதி கோரியுள்ளோம். பொதுமக்கள் பங்களிப்பாக 10 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் முதற்கட்ட அளவில் திட்டம் உள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும்,’’என்றார். விரைவில் துவக்க வலியுறுத்தல்