தினமலர் 04.04.2013
குடிநீரில் கழிவு நீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு
புழல்:குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிய பிரச்னைக்கு, சென்னை குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.
சென்னை மாதவரம் மண்டலம் 22வது வார்டில் புழல் காவாங்கரை மாரியம்மாள் நகர் பிரதான சாலை, திருநீலகண்டர் நகர், காஞ்சி அருள் நகர், தமிழன் நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் குழாய் இணைப்புகளில் கழிவு கலந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து “தினமலர்’ நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, மாதவரம் மண்டல பகுதி சென்னை குடிநீர் வாரிய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாரியம்மாள் நகர் பிரதான சாலையில் உள்ள, மழை நீர் வடிகால்வாயுடன், கழிவு நீர் குழாய் இணைப்பு பணியால் அருகில் இருந்த குடிநீர் குழாய் சேதமடைந்தது தெரிந்தது.
அந்த பணியை செய்தவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், குடிநீர் குழாய் உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அந்த இடத்தில் ஏற்பட்ட கசிவால் குடிநீரில் கழிவு நீர் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து சேதமடைந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது.