தினமலர் 20.02.2010
குடிநீருக்காக துணை முதல்வரை சந்திக்க திட்டம்
திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு தேவையான குடிநீர் கிடைக்காவிட்டால், அனைத்து கவுன்சிலர்களுடன் துணை முதல்வரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தவிக்கின்றனர். புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திடம் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் கோரியது. ஆனால், “குடிநீர் எடுத்து வருவதற்கு அதிக செலவு ஏற்படுகிறது; அதிக கட்டணம் செலுத்த வேண்டும்‘ என்று புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் கூறி வருகிறது.கூடுதல் கட்டணம் அளிப்பது தொடர்பான பேச்சு, அரசுடன் நடந்து வருகிறது. பல மாதங்களாகியும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை. ஆனால், கூடுதல் கட்டணம் செலுத்தி குடிநீர் வாங்கினால், பொதுமக்கள் கட்டும் குடிநீர் கட்டணத்தை, பல மடங்கு உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.அரசுடன் நடத்தப்படும் பேச்சு முடியும் வரை, நகராட்சிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையில் கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும். பேச்சு முடிவில் எட்டப்படும் தொகையை, கூடுதலாக அளித்து தண்ணீரை பெற்றுக்கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இக்கோரிக்கையை புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழகம் ஏற்கவில்லை. இதனால், குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது. மாதத்துக்கு சிலமுறை மட்டும் குடிநீர் வழங்கப்படுவதால், பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கோடை காலம் நெருங்குவதால், குடிநீர் தேவை அதிகரிக்கும். இப்பிரச்னையால், ஆளுங்கட்சி மற்றும் கவுன்சிலர்களின் செல்வாக்கு மக்களிடையே குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக, துணை முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர், நகராட்சியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த போது, குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் விஜயலட்சுமி கூறியதாவது: குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக 20 லட்சம் லிட்டர் தேவைப்படுகிறது. விலை நிர்ணயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்வுக்கு கொண்டு வந்து கூடுதலாக குடிநீர் கிடைக்க, துணை முதல்வரை சந்திக்க திட்டமிடப்பட்டது.நல்லூர் நகராட்சிக்கு வந்த நகராட்சி கூடுதல் இயக்குனர் சந்திரசேகரிடம், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக குடிநீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கல் தொடர்ந்து நீடித்தால், அனைத்து கவுன்சிலர்களுடன் துணை முதல்வரை சந்தித்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தப்படும், என்றார