குடிநீருடன் சாக்கடை கலந்ததை புதிய குழாய் அமைத்து சரிசெய்தனர்
பவானிசாகர்: புன்செய் புளியம்பட்டி 16வது வார்டில் திருவிக வீதியில் கண்ணப்பர் மஹால் அருகில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் வந்து கொண்டிருந்தது. இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் கடந்த 22ம் தேதி அன்று வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தனர். இதன்மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றி கழிவு நீர், குடிநீருடன் கலக்காதபடி முற்றிலும் சரிசெய்யப்பட்டு உள்ளது. தற்போது, புதிய குழாயில் குடிநீர் மிகவும் சுத்தமாக வருகிறது. கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த இப்பிரச்னை முடிவுக்கு வர காரணமாக இருந்த தினகரன் பத்திரிகைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் நன்றி தெரிவித்துள்ளனர்.