தினமணி 28.07.2012
குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுறுத்தல்
உதகை, ஜூலை 27: உதகை நகரில் தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், லாரிகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றன. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டது என்பதற்கான சான்றிதழ் நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்படுவதில்லை.
எனவே, தனியார் நிறுவனங்களின் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரைப் பயன்படுத்தும் பொதுமக்கள், குடிநீர் சுகாதாரமானதாகவும், சுத்திகரிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க நீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.