தினமணி 15.09.2009
குடிநீரை காய்ச்சி குடிக்க பழனி நகராட்சி வேண்டுகோள்
பழனி, செப். 14: மழைக் காலம் துவங்க இருப்பதால் குடிநீரை காய்ச்சி குடிக்க, பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பழனி நகராட்சி ஆணையர் காளிமுத்து, நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:
மழைக் காலம் துவங்க உள்ள நிலையில் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை பரவும் வாய்ப்புள்ளதால், குடிநீரை காய்ச்சி ஆறவைத்து உபயோகிக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் பராமரித்தல் அவசியம்.
மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, சிமெண்ட் தொட்டிகளில் பிளீச்சிங் போட்டு சுத்தம் செய்து நீரை தேக்க வேண்டும்.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெறுதல் வேண்டும்.
பொது சுகாதார பணியாளர்கள் வரும்போது கொசு உற்பத்தியை தடுக்கும் “”அபேட்” மருந்து தெளிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குதல் அவசியம்.
நகரில் உள்ள உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் உணவுப் பொருள்களை சூடாக வழங்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.