குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை
குடிநீரை கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ந.மணிகண்டன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கீழ்குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரங்களில் மழையின்மையால் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும் குடிநீரை விவசாயம், கட்டுமானப் பணிகள், வாகனங்களை கழுவுதல், வியாபார நோக்க பயன்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அத்துடன் பொது குடிநீர் இணைப்புக் குழாய்களில் ரப்பர் குழாய்கள் இணைத்து குடிநீரை எடுப்பதும் முறைகேடானது.
இத்தகைய முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.