தினமணி 20.11.2009
குடிநீர்த் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
திருச்சி, நவ. 19: திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ரூ.169 கோடி மதிப்பிலான குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி நிர்வாக இயக்குநரக தலைமைப் பொறியாளர் ஆர்.ரெகுநாதன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் த.தி.பால்சாமி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைக் கழகத் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டத்தில் தற்போது 6 தொகுப்புகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 7-வது தொகுப்பிலுள்ள பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்வது, பிரதான குடிநீர் உந்து குழாய் பதிக்கும் பணி மேற்கொள்வது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி சேவை நிறுவனப் பிரதிநிதிகள் பி.ஜி. ராஜன், ரா. நாகேந்திரன், எம்.பி. கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.