தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3.24 கோடி மதிப்பில்
புதிய குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். அந்தியூர் எம்எல்ஏ
எஸ்.எஸ்.ரமணீதரன், பேரூராட்சித் தலைவர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர்
எஸ்.கலைவாணன் வரவேற்றார்.
அந்தியூர் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய
வணிக வளாகக் கட்டடத்தை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திறந்து
வைத்ததுடன், குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கலும் நாட்டினார்.
இதில் அவர் பேசியது: அதிமுக ஆட்சியில் தொலைநோக்குடன் மக்களுக்கான
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் பயனில்லாத
திட்டங்களால் கஜானா காலி செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா 33 துறை
அமைச்சர்களுடன் மதிநுட்பத்துடன் செயல்பட்டு நிதிநிலையை மேம்படுத்தியதோடு,
வரியில்லாத நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார்.
சமத்துவ, சமதர்ம சமுதாயம் மலர கல்வித் துறைக்கு கூடுதல்
முக்கியத்துவத்துடன் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார். மக்கள் நலத்
திட்டங்களை அளிக்கும் முதல்வருக்கு நம்பிக்கையுடன் ஆதரவளிக்க வேண்டும்
என்றார்.
12 மகளிர் குழுக்களுக்கு ரூ.18.95 லட்சம் நேரடிக் கடன், அந்தியூர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு
ரூ.6.7 லட்சம் சுழல் நிதி உள்பட 20 பயனாளிகளுக்கு ரூ.26.10 லட்சம்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் அலுவலர் எஸ்.கணேஷ், ஊராட்சிக் குழுத் தலைவர் செல்வம்,
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், அதிமுக ஒன்றியச்
செயலர் இ.செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அப்பாநாயக்கர் (அந்தியூர்),
எஸ்.எம்.தங்கவேலு (பவானி), எஸ்.எஸ்.அய்யாசாமி (அம்மாபேட்டை), கோபி வேளாண்
விற்பனை மைய இயக்குநர் வழக்குரைஞர் பி.யு.முத்துசாமி, செயல் அலுவலர்
எம்.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.