குடிநீர் இணைப்புக்கு அனுமதி பெறாதவர்கள் மீது நடவடிக்கை
மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சியில் கழிக்குப்பம், மண்டலாய், மாரியம்மன் கோயில், சம்புவெளி, கரிப்பாளையம் உள்ளிட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதால், இப்பகுதி மக்களுக்கு கந்தாடு, தீர்த்த வாரி ஆகிய பகுதிகளில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீரை பேரூராட்சி யின் அனுமதி பெறாமல் முறைகேடாக மின்மோட்டார் வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து பகுதி மக்களுக்கும் முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கந்தாடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு வைத்து உள்ளவர்கள் 10 நாட்களுக்குள் முறையாக அனுமதி பெற வேண்டும்.தவறினால் பேரூராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தலைவர் சேகர், செயல் அலுவலர் ஊமைத்துரை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.