தினமலர் 22.04.2010
குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யாறு நகராட்சி எச்சரிக்கை
செய்யாறு:’கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் உடனடியாக மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்‘ என செய்யாறு நகராட்சி எச்சரித்துள்ளது.இது குறித்து செய்யாறு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜா தெரிவித்துள்ளதாவது:இப்போது கடும் வறட்சி நிலவுவதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தடையில்லாமல் இருக்க நகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், இப்போது பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே தாங்களாகவே பொதுக்குழாய் அமைத்து குடிநீர் பிடிப்பதாக புகார் வருகிறது. நகராட்சி அனுமதியில் லாமல் பொதுக்குழாய் அமைப்பது குற்றமான செயல் ஆகும்.மேலும், குடிநீர் இணைப்பு களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே, குடிநீர் பகிர்மான குழாய்களில் யாராவது பொதுக்குழாய் அமைத்தாலோ அல்லது மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தாலோ உடனடியாக குழாய் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். மேலும், மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.