குடிநீர் உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல்
திருச்சி: “குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்’ என்று மேயர் ஜெயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் மக்கள்குறைதீர் கூட்டம் நடந்தது. மாநகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 25 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து, மனுதாரருக்கு பதில் அனுப்ப மேயர் ஜெயா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோடைக்காலத்தில் எதிர்பாரதவிதமாக நிலவிவரும் நிலத்தடி நீர் குறைவின் காரணமாக, பொதுமக்களுக்கு வினியோகப்படும் குடிநீர் வினியோகம் சமச்சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிலர் மின்மோட்டார் வைத்து குடிநீர் இணைப்புகளிலிருந்து நீர் உறிஞ்சுவதாக புகார்கள் வந்துள்ளன.மாநகராட்சி சட்டப்படி, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக சோதனை நடத்தி, குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்.
அடைப்பான்கள் இல்லாமல் வீணாக வெளியேறும் பொது குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்.எனவே, மாநகர மக்கள் மாநகராட்சியால் வினியோகப்படும் குடிநீரை தேவைக்கேற்பவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவேண்டும் என்று மேயர் தெரிவித்தார். கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக் மீரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.