தினமலர் 02.02.2010
குடிநீர் கசிவு சரி செய்ய வாங்கிய நவீன வாகனம் வீண்: மாநகராட்சி வளாகத்தில் ‘சும்மா‘ நிற்கிறது
ஈரோடு: குடிநீர் கசிவு சரிசெய்வதற்காக மாநகராட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட “புளு பிரிகேடு‘ வாகனம் பயனற்று கிடக்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு வைராபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து, சுத்திகரிப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வ.உ.சி., பூங்கா, கருங்கல்பாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ன. வார்டுகளில் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து விடுவது வாடிக்கை. சில சமயங்களில் மெயின் பைப்லைன் உடைந்து விட்டால் இரண்டு, மூன்று நாட்கள் கூட தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. பைப் லைன் உடைந்த இடத்தின் வழியே குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்துவிடவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறான சிக்கல்களை அதே இடத்தில் சரிசெய்து கொள்ள வசதியாக, நடமாடும் கசிவு நீர் சரி செய்யும் வாகனம் (புளு ரிகேடு), நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்றாண்டு மே மாதம் ஈரோடு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 10 லட்சம் ரூபாய், மாநகராட்சி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த வாகனம் வாங்கப்பட்டது.
கசிவு நீர் சரிசெய்யும் வாகனத்தில் தண்ணீரில் உள்ள தாதுப்பொருள் கண்டறியும் கருவி, தண்ணீரில் மின்சாரம் அளவு கண்டறியும் கருவி, கழிவு நீர் கலந்துள்ள அளவைக் காட்டும் கருவி, குளோரின் அளவு பரிசோதனை செய்யும் கருவி, லேப்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப்புடன் இன்டர்நெட் இணைப்பு, பிரின்டர் கருவி, கம்ப்யூட்டரை இயக்க ஜெனரேட்டர்கள், மூன்று சுத்தி, சம்பட்டி, கடப்பாறை, பைப் கட்டர், பைப் ரின்ச், பிளம்பிங் கருவிகள், பத்து பேரிகாடு உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கசிவுகளை சரி செய்ய, வாகனம் ஓட்ட என ஐந்து பேர் வாகனத்தில் இருப்பர். பைப் லைன் எங்காவது உடைந்து இருந்தால் அவர்களே சரி செய்து விடுவர். மாநகராட்சிக்கு வாகனம் வந்த போது இப்படித்தான் பெருமையாக அதிகாரிகள் கூறினர். ஆனால், வாகனம் வந்து பல மாதங்களாகிறது. மாநகராட்சி வளாகத்தை விட்டு இந்த வாகனம் வெளியே வந்ததேயில்லை. தூசி படிந்தும், வெயிலில் காய்ந்தும் பயனற்று கிடக்கிறது.
சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி இன்ஜினியர் வடிவேலிடம் கேட்டபோது, “வாகனத்தில் செல்வோருக்கு பயிற்சி அளிக்க மும்பையை சேர்ந்த ஒரு குழுவினர் வர உள்ளனர்.அவர்கள் பயிற்சி அளித்த பின் வாகனம் பயன்பாட்டுக்கு வரும்‘ என்றார். ஆனால், இதுவரை வாகனம் பயன்பாட்டுக்கு வரவேயில்லை. “புளு பிரிகேடு‘ வாகனம் தற்போது காந்திஜி ரோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதார அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் வரிப்பணம் 15 லட்சம் ரூபாய் வீணாகிவிடும்.