தினமணி 22.09.2009
குடிநீர் கட்டணம் கூடுதலானால் மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் .
சென்னை, செப்.21: “”குடிநீர் கட்டணம் கூடுதலாக வந்தால், அந்தந்த மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்” என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மீட்டர் பொருத்தாத குடியிருப்புகளைவிட, மீட்டர் பொருத்திய அடுக்குமாடி குடியிருப்புகளில் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் அளித்த விளக்கம்:
கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து மீட்டர் பொருத்தப்பட்ட குடியிருப்புகளில் குடிநீரின் மாத உபயோக அளவு 10 ஆயிரம் லிட்டராக இருக்கும்போது, ஆயிரம் லிட்டருக்கு ரூ. 2.50 வீதம் வசூலிக்கப்படும்.
10 ஆயிரம் லிட்டரிலிருந்து 15 ஆயிரம் லிட்டர் வரை ஆயிரம் லிட்டருக்கு ரூ. 10 எனவும், 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் 25 ஆயிரம் லிட்டர் வரை ஆயிரம் லிட்டருக்கு ரூ. 15 எனவும், 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்தும்போது ஆயிரம் லிட்டருக்கு ரூ. 25 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரே இணைப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் அதிகபட்ச படிமுறையான (ஸ்லாப்) ஆயிரம் லிட்டருக்கு ரூ. 25 என்ற கட்டண விகிதத்தில் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று , 1.1.2008 தேதியிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கும் குடிநீரின் அளவை அங்குள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தற்போது கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்த புதிய முறைப்படி அல்லாமல், பழைய முறைப்படி கணக்கிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அந்தந்த மண்டல அலுவலகங்களில் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.