தினமலர் 01.04.2010
குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற எளிமையான முறை
சென்னை : குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற எளிமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: குடிநீர் மற்றும் கழிவுநீர் விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பணிமனைகளிலும், பகுதி அலுவலகங்களிலும், தலைமை அலுவலகத்திலும், குடிநீர் வாரிய இணைய தளத்தில் இருந்தும் இலவசமாக பெறலாம். இதை எளிதாக பூர்த்தி செய்யலாம். படிவத்தை கட்டட உரிமையாளரோ, அவரது உரிமை பெற்றவரோ சமர்ப்பிக்கலாம். இதில் பிளம்பர், பொறியாளர் கையெழுத்திட தேவையில்லை.விண்ணப்பங்களை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக பதிவு முகப்பில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின், அதற்குரிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு ஒப்புகை சீட்டு வழங்கப் படும். விண்ணப்பத்தை பதிவு செய்த ஏழு நாட்களுக்குள், இணைப்புக் கான ஒப்பளிப்பு வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் (பதிவுப் பிரிவு) / தகவல் மற்றும் உதவி அலுவலரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசியில் 044 – 28451300 விரிவாக்கம் 304, 369, 335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.