தினமலர் 30.04.2010
குடிநீர் குழாயை உடைத்தால் ‘கிரிமினல்‘ வழக்கு : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல்: ”குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை உடைத்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கலெக்டர் சகாயம் எச்சரித்துள்ளார். ராசிபுரம் தாலுகா மோளப்பாளையம் கிராமத்தில் ‘கிராமத்தை நோக்கி மாவட்ட நிர்வாகம்‘ நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது: கடைகோடி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிராமத்தில் தங்கி மனுக்கள் பெற்றதில், மாதாந்திர உதவித்தொகை கேட்டு 26 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உதவித்தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், நிலப்பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு கேட்டு பெறப்படும் மனுக்களுக்கு 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சின்னப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரியா என்பவரது கணவர் இறந்து விட்டதால், அரசு உதவித்தொகை கேட்டு மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட பி.டி.ஓ.,க்கள் ஆழ்துளை கிணறு அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை யாராவது உடைத்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த பெருமாயி (75) என்பவருக்கு, மகனிடம் இருந்து பராமரிப்பு நிதி பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழனியப்பனூர் கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு மயானத்திற்கு செல்லும் பாதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் ராசிபுரம் – ஆத்தூர் சாலையில் கலெக்டர் சகாயம் வாகன தணிக்கை செய்தார், அப்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் உட்பட 11 பேர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நாமக்கல் ஆர்.டி.ஓ., ராஜன், தாசில்தார் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.