தினகரன் 12.01.2010
குடிநீர் சிக்கனம் விளம்பர படத்தில் சச்சின்
மும்பை : குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் விளம்பர படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடித்தார். இந்த படத்தை மும்பை மாநகராட்சி தயாரித்துள்ளது.
மும்பையில் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், வீணாக்காமல் அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக விளம்பர படம் ஒன்றை எடுத்தது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். ‘தண்ணீரை சேமியுங்கள்Õ என்ற தலைப்பிலான இந்த விளம்பர பிரசார படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முன்தினம் பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இந்த விளம்பரத்தில் கிரிக்கெட் சீருடையில் டெண்டுல்கர் தோன்றுகிறார். தண்ணீரை வீணாக்காமல் சேமித்து மும்பையை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்களை இந்தி மற்றும் மராத்தியில் டெண்டுல்கர் பேசுகிறார்.
30 விநாடிகள் ஓடும் இந்த விளம்பரப்படம் இன்னும் 10 தினங்களில் டிவிகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும். போஸ்டர்களும் தயாராகின்றன என்று மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். தண்ணீர் சிக்கனம் குறித்து டெண்டுல்கர் கூறுகையில், ‘‘தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் எண்ணத்தில் நான் ஷவரில் குளிப்பதற்கு பதிலாக வாளியில் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறேன்Ó என்றார்.