குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள்
ஈரோடு, : குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும் என்று கஸ்தூரிபா கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அரச்சலூர் அடுத்துள்ள கஸ்தூரிபாகிராமம் வெட்டுக்காட்டுவலசு காலனியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, அரச்சலூர் பேரூராட்சி 10வது வார்டு வெட்டுக்காட்டுவலசு காலனியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
வறட்சியினால் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு, கைபம்பு, மேல்நிலை தொட்டி என குடிநீர் ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே வறட்சியை கருத்தில் கொண்டு ஆழ்குழாய்கிணறுகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.