குடிநீர் தட்டுப்பாடு வராது: பேரூராட்சிகளின் இயக்குநர் உறுதி
பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் போர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தக்கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் செல்வராஜ், உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. இதனையொட்டி, இப்பேரூராட்சிக்குட்பட்ட இடங்களை பேரூராட்சிகளின் இயக்குநர் டாக்டர் செல்வராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உளுந்தூர் ஏரி கிணறு, விருத்தாசலம் ரோடு ஏரி, சென்னை சாலையில் உள்ள ஸ்ரீராம்நகர், வி.கே.எஸ் நகர், கையிலாச குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ரூ.1.20 கோடி நிதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிநீர் போர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.
உளுந்தூர்பேட்டை ஏரிகளில் உள்ள குடிநீர் கிணறுகளை மழைக்காலங்களில் சென்று பார்வையிடுவதற்கு கிணறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். விருத்தாசலம் ரோட்டிலுள்ள ஏரியில் உள்ள கிணற்றை 5 மீட்டர் ஆழப்படுத்தி பாதுகாப்பாக மூடுவதற்கும், செப்பனிடுவதற்கும் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் சின்னதுரை, கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குமரகுரு, உளுந்தூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், தலைவர் க.ஜெயசங்கர், கவுன்சிலர் மாலதி ராமலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.