தினமணி 01.09.2009
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை
வேலூர், ஆக. 31: வேலூரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க சதுப்பேரி ஏரிப்பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் ப. கார்த்திகேயன் தெரிவித்தார்.
வேலூர் மாநகரமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நடந்த விவாதம்:
வேலூரில் தண்ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. 15 நாளுக்கு ஒருமுறைதான் விநியோகிக்கப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பி.பி. ஜெயப்பிரகாஷ், சீனிவாசகாந்தி, மதிமுக உறுப்பினர் நீதி, அதிமுக உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
தண்ணீர் பிரச்னையை தீர்க்க 27 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், இரு தண்ணீர் வாகனங்கள் வாங்கவும் ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பொன்னை நீராதார கிணறுகள் தூர்வாரப்படும்.
கூடுதல் நீர்வரத்துக்காக சதுப்பேரி ஏரிப்பகுதியில் நீராதாரத்தைக் கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார் மேயர்.
புதிய பஸ்நிலையத்தில் பிளாட்பாரக் கடைகள், தள்ளுவண்டிகள் அதிகரித்துவிட்டன, அவர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஜி.பி.எச். சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று சீனிவாசகாந்தி தெரிவித்தார்.
புதிய பஸ்நிலைய கடைகள் 48 உறுப்பினர்களும் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன, இதில் அதிமுக உறுப்பினர்களுக்கு உடன்பாடில்லை, பொது ஏலத்தில்தான் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜி.ஜி. ரவி தெரிவித்தார். அதையே காங்கிரஸ் உறுப்பினர் ஜெயப்பிரகாஷும் தெரிவித்தார். அப்படி யாரும் திட்டமிடவில்லை என்று மேயர் மறுப்பு தெரிவித்தார்.
குப்பை எடுப்பதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பல இடங்களில் குப்பைகளை எடுப்பதில்லை, அந்த பணியை சுகாதார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலீல்கான், அசேன் ஆகியோர் வலியுறுத்தினர். அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, அப்படி சரியாக செய்யவில்லையெனில் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்றார் மேயர்.
விவாதத்துக்குப் பிறகு மன்றத்தில் 104 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. அதில் இரு தீர்மானங்கள் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு, மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.