குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திருச்சி: திருச்சியில் கோடையை சமாளிக்க குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.
திருச்சி மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக ரூ.221.42 கோடி மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோடை காலம் நெருங்குவதால் இந்த திட்டத்தை விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா உள்ளிட்டோர் குடிநீர் திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகள், நீர் சேமிப்பு கிணறுகள், அம்மா மண்டபம், காவிரிப் பாலம், அரியமங்கலம், மேல கல்கண்டார் கோட்டை, பொன்மலைப்பட்டி போன்ற இடங்களில் குடிநீர் கொண்டு செல்லப்படும் பிரதான குழாய்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொள்ளிடத்திலிருந்து பரிசோதனை முறையில் நீரேற்றும் பணி நிலவரத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் இந்த பணிகளை மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆய்வின்போது, மாநகர பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாக பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், உதவி செயற் பொறியாளர்கள் நாகேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.