தினமணி 03.09.2009
குடிநீர் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி, செப். 2: சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான தலைமை நீரேற்று நிலைய பணிகள் முக்கூடலில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சங்கரன்கோவில் நகராட்சி, ஆலங்குளம் பேரூராட்சி மற்றும் 94 வழியோர கிராமங்களில் நடைபெறும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
நந்தன்தட்டு, கண்டப்பட்டி, நாச்சியார்புரம், ஊத்துமலை சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் ரூ. 59.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று இயந்திரங்களை பொருத்துமாறு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர் மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி ஆகிய பகுதிகளில் வரையறுக்
கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
ஊத்துமலை மற்றும் வீரசிகாமணியிலுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளை பார்வையிட்ட அவர், அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் பி.டி.மூர்த்தி, உதவி பொறியாளர் டி. கனகராஜ், ஊராட்சி ஒன்றியத் தலைவர் அன்புமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.