தினமணி 18.05.2010
குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு: அமைச்சர்சிவகாசி, மே 18:விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி நகர்களுக்கு குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்வாய்க்கிழமை கூறினார்.
சிவகாசியில் 3518 பேருக்கு ரூ 4.46 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் மேலும் பேசியதாவது:
மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக குறைகளைக் கேட்கும் முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்டங்களை திமுக அரசு அளித்து வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் கொடுத்தவருக்கு நன்றியுடன் இருங்கள் என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் பேசியதாவது:
பொது மக்களிடமிருந்து 19,477 மனுகள் பெறப்பட்டது. தற்போது அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 3.42 லட்சம் பேருக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 3 லட்சம் பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மூன்று வருட உத்தரவாதமுள்ள கடன் அட்டைகள் வழங்குவதற்கு 11 ஆயிரம் விவசாயிகளிடம் வேளாண்மைத் துறையினர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
ஜூன் 5-ம் தேதி மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுóம் என்றார் ஆட்சியர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் கணேசன் வரவேற்றார். சிவகாசி நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் டி.வனராஜா ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் காசிவிஸ்வநாதன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.