தினகரன் 30.08.2010
குடிநீர் தொட்டி கட்டுமான பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி
திருப்பூர், ஆக. 30: நல்லூர் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ. 99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருவதில் ஏற்படும் காலதாமதம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் நகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் திருப்பூர் மாநகராட்சியையொட்டி அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் அதிக அளவில் பெருகி வருகின்றன. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 2வது குடிநீர் திட்டத்தில் தினமும் 4.50 லட்சம் லிட்டரும், 3வது குடிநீர் திட்டத்தில் 17.50 லட்சம் லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகின்றன. இரண்டாவது திட்ட குடிநீர் முறையாக வழங்கப்படாவிட்டாலும், வழங்கப்படும் 3வது திட்ட குடிநீரை தேக்கி வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீரை தேக்கி வைக்க போதுமான அளவு தொட்டிகள் இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக நல்லூர் நகராட்சி முழுவதும் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சிக்கு உட்பட்ட சேரன் நகரில் தண்ணீரை தேக்கி வைக்க பெரிய தொட்டிகள் கட்ட கடந்த ஓராண்டுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு, மண்டல நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது. பொது நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியும், 49.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி மற்றும் மோட்டார் அறையும் கட்டப்படுகிறது. பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.