தினமலர் 03.03.2010
குடிநீர் பகிர்மான குழாய்க்கு அனுமதி
திருவண்ணாமலை : தி.மலை ராமமூர்த்தி நகரில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை நகராட்சியின் ஒருபுற எல்லையாக ராமமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன. இங்கு அதிகளவில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்கள் கிடையாது. எனவே, இப்பகுதி மக்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இங்கு ஒரு சில இடங்களில் மினி குடிநீர் தொட்டிகள் வைத்து அவற்றுக்கு லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனாலும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
எனவே, இந்த பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பது குறித்து நகராட்சி சார்பில் திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால், குழாய் வரும் பாதையில் ரயில்வே “டிராக்‘ வருவதால், ரயில்வே துறை மூலம் அனுமதி பெற்றுத்தான் குழாய் பதிக்க முடியும்.இது தொடர்பாக, நகராட்சி மூலம் ரயில்வே துறை திருச்சி பிரிவு முதுநிலை மண்டல பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் அதற்கான அனுமதி கடிதம் நகராட்சிக்கு வந்துள்ளது. அதில், 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை இதற்காக ரயில்வே துறைக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி மூலம் இந்த தொகை செலுத்தப்பட உள்ளது. எனவே, ராமமூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் பயன்பெற வேண்டி, விரைவில் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கப்பட உள்ளது.