குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்டக் குழுத் தலைவரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான கீதாமணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, திருச்சி மாவட்டம் பெருகமணியில் இருந்து 12 கி.மீ தொலைவுள்ள நங்கவரத்துக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். இதே பேரூராட்சியில் 6,7-வது வார்டுகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குறிச்சி, தென்கடைகுறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள 2,800 மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.
கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் மழை, வெள்ளக் காலங்களில் வீணாகச் செல்லும் நீரை, மயில்ரங்கத்திலிருந்து கூடலூர் வழியாகவோ, அல்லது சின்னதாரபுரம் சவேரியப்பன் குளத்திலிருந்து வெங்கடபுரம் வழியாகவோ, இப்போதுள்ள வாய்க்கால்கள் மூலம் அல்லது புதிதாக வாய்க்கால்களை உருவாக்கி அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டுச் சென்றால், ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறித்து கருத்துருவை தமிழக அரசு அனுப்புவது,
கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், நிலத்தடி நீரையும் பெருமளவில் உறிஞ்சி அந்த பகுதியில் வறட்சியை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த மரங்களை முற்றிலும் அழிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், தேவையான செயல் திட்டங்களை வகுக்கவும் அரசுக்குக் கருத்துரு அனுப்புதல், கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது,
கரூரில் உள்ள கரூர், திண்டுக்கல் புறவழிச்சாலையில் வாகனங்கள் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்தும், பல இடங்களில் ஏற்ற இறக்கமாகவும் உள்ள சாலைப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் வினய், உறுப்பினர்கள் மாலதி,ஜெகநாதன், திருப்பதி, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.