தினமணி 01.03.2013
குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கீழ்குந்தா பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு
வரும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது என கீழ்குந்தா பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கீழ்குந்தா பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்குந்தா பேரூராட்சித் தலைவர் ஜெயாசந்திரன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ந.மணிகண்டன், துணைத் தலைவர் எம்.போஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மஞ்சூர் பஜார் பகுதியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டது.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால், நீர்நிலைகள் வறண்டுவிட்டன. குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
குடிநீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதைத் தடுப்பது, குழாய்களில் ஏற்படும் கசிவுகளை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்வது, குடிநீரை வேறு பணிகளுக்கு பயன்படுத்து வதைத் தடுக்க தீவிரமாக கண்காணிப்பது, அது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.