தினமணி 10.08.2010
குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருநெல்வேலி,ஆக.9: குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
திங்கள்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகமது மைதீன் தலைமை வகித்தார்.
உதவி ஆணையர் (பொறுப்பு) து. கருப்பசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தவ்லத்:
எனது வார்டில் துப்புரவுப் பணியாளர்கள் போதுமானளவுக்கு இல்லாமல் இருப்பதால், குப்பை தேங்குகிறது. இதனால் சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது. பெரும்பாலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இருப்பதால், குடிநீர் பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசாத் தெரு பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ. பாண்டிக்குமார்:
எனது வார்டில் செயின்ட் மேரீஸ் தெரு,ஜோசப் தெரு ஆகிய இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. இணைப்புக் குழாய்கள் போதுமானளவுக்கு இங்கு இல்லாமல் இருப்பதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முகைதீன் அப்துல்காதர்:
எனது வார்டு பகுதியில் துப்புரவுப் பணிகள் சரியாக நடைபெறாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு காலம் நெருங்கி வரும் நேரத்தில் குடிநீர், சுகாதாரம் நல்ல முறையில் இருக்க மாநகராட்சி நடவடிக்கை வேண்டும்.
36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் யூசுப்சுலைகா:
எனது வார்டில் பசீர் அப்பாத் தெருவில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் தெரு விளக்குள் எரியாமல் உள்ளன.
மண்டலத் தலைவர் முகம்மது மைதீன்:
ரம்ஜான் நோன்பு இம் மாதம் 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக மேலப்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை சரி செய்ய வேண்டும் என ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அதில் சுகாதாரம் பேணுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். ஆணையர் அதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அவர்.
இதேபோல, கூட்டத்தில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க கோரி, மாமன்ற உறுப்பினர்கள் பேசினர்.