குடிநீர் பிரச்னை தீர வாடகை ஜெனரேட்டர்: பொள்ளாச்சி நகராட்சியில் தீர்மானம்
மின்தடையால் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க, நீரேற்று நிலையத்தில் வாடகைக்கு ஜெனரேட்டர் அமைக்க பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொள்ளாச்சி நகர்மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், குடிநீர்ப் பிரச்னையைப் போக்கும் விதமாக மின்தடை ஏற்படும் நேரத்தில் மின் மோட்டார்களை இயக்குவதற்காக ரூ. 36 லட்சம் பொது நிதியில் இருந்து 500 கே.வி.ஏ. திறன் கொண்ட ஜெனரேட்டரை வாடகைக்கு வாங்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொள்ளாச்சி, ராஜா மில் சாலையில் மார்க்கெட் சந்திப்பில் இருந்து திருவள்ளுவர் திடல் வரை உள்ள சாலை பழுதடைந்துள்ளதால், அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்தச் சாலையைப் புதுப்பிக்க ரூ. 24 லட்சமும், குமரன் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 12 லட்சம் ஒதுக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இத்தீர்மானங்கள், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த நகராட்சிக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மெக்சன் மணி, நீலகண்டன், முரளி ஆகியோர் மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.