தினமலர் 30.06.2010
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கண்டனம்
திருச்சி: “திருவானைக்காவல் பாதாள சாக்கடை மின்மோட்டார் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தொழிலாளர் விஷவாயுவால் பலியான சம்பவத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை‘ என நேற்று நடந்த திருச்சி மாநராட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம், மேயர் சுஜாதா தாமதமாக வந்ததால் 12 மணிக்கு துவங்கியது. மேயர் தாமதமாக வந்ததற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவுக்கு அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: காங்கிரஸ் ஜவஹர்: பாதாளசாக்கடை மின்மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தொழிலாளர் விஷவாயு தாக்கி இறந்தனர். புதிய பாதாளசாக்கடை திட்டத்தின் கழிவுநீர் வெளியேற வழியில்லை. குடியிருப்பிலிருந்து சாக்கடைக்கு இணையும் குழாய்கள் சாலைக்கு அரை அடிக்கு கீழேயே பதிக்கப்பட்டுள்ளது. கனரகவாகனம் செல்லும் போது, அவை உடைந்துவிடுகின்றன.
தொழிலாளர் இறந்தது தொடர்பாக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் லட்சியமான பதில் தான் வருகிறது. அ.தி.மு.க., சீனிவாசன்: பாதாளசாக்கடை டெண்டர் எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனர்: புதிய பாதாளசாக்கடை திட்டம் குடிநீர் வடிகால் வாரியம் கீழ் ஏஜன்டிடம் பணி ஒப்படைக்கப்பட்டு, ஐந்து ஆண்டு அவர்கள் பராமரிப்பில் இருக்கும். அதன்பிறகு தான் மாநகராட்சி வசம் வரும். மின்நிறுத்தம் காரணமாக கழிவுநீர் பம்பிங் செய்ய முடியவில்லை என்று ஏஜன்சிகள் கூறுகின்றனர். ஜெனரேட்டர் மூலம் பம்ப் செய்து கழிவுநீரை வெளியேற்றும்படி கூறியுள்ளோம். புதிய திட்டத்தில் விஷவாயு வெளியேறும் வகையில் வென்டிலேட்டர் வசதியில்லை. ராமன்: விஷவாயு தாக்கி இதுவரை மொத்தம் ஐந்து பேர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கமிஷனர்: குடிநீர் வடிகால் வாரிய ஏ.இ., இ.இ., என அனைவருக்கும், “சாக்கடைக்குள் ஆட்களை இறக்கி வேலை பார்க்கக் கூடாது‘ என்று கூறியுள்ளோம். அதற்கு தேவையான உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. அதை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அனைத்து கவுன்சிலர்களும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.