தினமலர் 13.04.2010
குடிநீர் வரி கட்ட புதிய அட்டை
சென்னை : குடிநீர் மற்றும் சேவைக் கட்டணம் செலுத்த வசதியாக, ஐந்தாண்டுக்கான புதிய அட்டையை குடிநீர் வாரியம் இலவசமாக வழங்குகிறது.குடிநீர், கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:குடிநீர் வரி, சேவைக் கட்டணங்களை செலுத்த வசதியாக குடிநீர், வடிகால் வாரியம் வழங்கிய அட்டை 2010 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
2010 முதல் 2015 வரை பயன்படுத்தும் வகையில், குடிநீர் வரி கட்டண அட்டை ஏப். 15 முதல் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.புதிய அட்டைகளை பணிமனை அலுவலங் களில் பெற்றுக் கொள்ளலாம். அட்டைகள் வழங்கும் போது தரப்படும் தன்னிலை விளக்க படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். பழைய அட்டை, கடைசியாக வரி செலுத்திய ரசீது காண்பித்த பிறகே புதிய அட்டை வழங்கப்படும்.இதற்கு முன் அட்டை பெறாதவர்கள், சொத்து வரி புத்தக விவரங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். புதிதாக வரி விதிக்கப்பட்டோருக் கான அட்டைகள், பகுதி அலுவலங்களில் மட்டுமே வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமம் இருந்தால் பகுதி பொறியாளரை அணுகலாம்.இவ்வாறு சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.