தினமலர் 24.04.2010
குடிநீர் வாரிய இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவை சரிபார்க்க வேலைவாய்ப்பகம் அழைப்பு
தஞ்சாவூர்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு மாநில பதிவு மூப்பிற்காக தகுதி வாய்ந்த மனுதாரர்கள் வரும் 26ம் தேதி தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என்று உதவி இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இளநிலை உதவியாளர் பணியிடம் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள், 1.7.09 அன்று 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பொதுவிதியின்படி வயது வரம்பில் சலுகை உண்டு. இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொ) முன்னுரிமை உள்ளவர்கள் ஆண், பெண் இருபாலரும் 12.9.07 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும். கலப்பு திருமணம் புரிந்தோர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மொழிப்போர் தியாகியின் வாரிசுகள் ஆகியோருக்கு முன்னுரிமை உண்டு.இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள்) முன்னுரிமை அற்றவர்கள் 11.4.88 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொ) முன்னுரிமை அற்றவர்கள் ஆண், பெண் இருபாலாரும் 20.11.90 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.இந்து மலை சாதியினர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் (எஸ்.டி) பொது– முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் முன்னுரிமை அற்றவர்கள்-29.3.2010 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும். இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொ) ஆண், பெண் இருபாலரும் மாற்றுத்திறன் உடையவர்கள் ஆர்தோ பிரிவில் (உடல் ஊனமுற்றோர்) 9.1.95 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொ) மாற்றுத் திறன் உடையவர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் (உடல் ஊனமுற்றவர்கள்) கண் பார்வையற்றோர், காது கேளாதவர்கள் 29.3.2010 தேதிக்குள் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மலைசாதியினர் பழங்குடியினத்தவர்கள் தவிர பிற இனத்தைச் சார்ந்தவர்கள் எவரும் இந்த பணியிடம் தொடர்பாக இந்த அலுவலகத்திற்கு கட்டாயம் வருகை தர வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வரும் 26ம்தேதிக்கு பிறகு பெறப் படும் கோரிக்கைகள் ஏற்க இயலாது.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.