தினமணி 29.09.2009
குடிநீர் வால்வுகளை நீக்கினால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
நாமக்கல், செப். 28: குடிநீர் விநியோகத்தை சீராக்க நிறுவப்பட்ட குடிநீர் வால்வுகளை நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் நகராட்சி தலைவர் இரா. செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் நகராட்சி சார்பில், குடிநீர் விநியோகத்தை சீராக்கவும், அனைவருக்கும் சமமான அளவில் குடிநீர் விநியோகிக்கவும் ஃபுளோ கன்ட்ரோல் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் திறந்துவிடும் தருணங்களில் பலரும் இந்த வால்வுகளை நீக்கிவிடுவதால் ஒரு சிலர் அதிகளவில் தண்ணீர் பெறுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கை நகராட்சி கவனத்துக்கு தெரியவந்தால் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
நகரில் புதிய குடிநீர் இணைப்பு கோரும் நபர்கள் பாதாளை சாக்கடை திட்ட பணிகள் முடிவதற்கு முன்பே உரிய கட்டணத்தை செலுத்தி இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.