தினமணி 23.09.2009
குடிநீர் விநியோகம் தொடக்கம்
புதுச்சேரி, செப். 22: அரியாங்குப்பம் தொகுதி வேங்கடாநகர் பகுதியில், ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
அரியாங்குப்பம் தொகுதிக்குள்பட்ட ஆர்.கே. நகர், சிவலிங்கபுரம், துளசிங்கம்நகர், ரோசினிநகர், நேதாஜி நகர், மணவெளி போகும் வழி, மாஞ்சாலை ஆகிய பகுதிகளில் நீண்ட நாள்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இதுகுறித்து தொகுதி எம்எல்ஏ ஆர்.கே.ஆர்.அனந்தராமனிடம் அப் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவரது முயற்சியின் பேரில் வேங்கடா நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு (450 அடி) அமைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ அனந்தராமன் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேணுகோபால், இளநிலை பொறியாளர் பாஸ்கரன், பஞ்சாயத்து துணைத் தலைவர் கெங்கமுத்து உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.