தினமணி 22.04.2010
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ராமேசுவரம், ஏப். 21: ராமேசுவரம் நகராட்சியின் மூலம் தெருக் குழாயில் குடிநீர் விநியோகம் செய்யாததால், கடந்த 4 நாள்களாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ராமேசுவரம் நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 600 குடிநீர் தெருக் குழாய்கள் உள்ளன. இக் குழாய்களுக்கு கடந்த காலங்களில் நம்பு கோயில், செம்மடத்தில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவந்தது. ஆனால், காவிரி கூட்டுக் குடிநீர் வருகையால், மேற்கண்ட பகுதியில் குடிநீர் எடுப்பதை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.
இதனால் இயற்கையாக நகராட்சிக்குக் கிடைத்த நல்ல குடிநீரை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இந் நிலையில் 4,5,6,7,8,9 ஆகிய வார்டுகளில் உள்ள புது ரோடு, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வேர்கோடு, முத்துராமலிங்கத் தேவர் நகர், இந்திரா நகர், கரையூர், முனியசாமி கோயில் தெரு, பழைய மார்க்கெட் தெருவில் உள்ள சுமார் 300 தெருக் குழாய்களுக்கு கடைசியாக ஏப்ரல் 17-ல் காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தற்போது ஒரு குடம் ரூ.2-க்கு வாங்கி வருகின்றனர். இத் தெருக்களுக்கு ஏற்கெனவே நம்பு கோயிலில் இருந்து குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராமேசுவரம் நகராட்சி ஆணையர் போஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி குடிநீர் விநியோகத்தால் மற்ற நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் எடுப்பது இல்லை. இதன் மூலம் மின்சாரச் செலவு மிச்சப்படுகிறது. தற்போது ராமேசுவரம் வரும் காவிரி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குறிப்பிட்ட சில தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வருவதால், ஓரிரு தினங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.’