தினமலர் 22.08.2012
குடிநீர் விரயம் தவிர்க்க பேரூராட்சி ஆலோசனை
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் விநியோகிப்படும் குடிநீரை விரயமாக்குவதையும், அதிகளவு சேகரித்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சின்னாளபட்டிக்கு நிலக்கோட்டை பேரணையாற்றில் மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.சில ஆண்டுகள் முன்னர் வரை, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வாரத்திற்கு ஒருநாள் குடிநீர் விநியோகம் நடக்கும். பிளாஸ்டிக் குடங்கள்,பேரல்களில் குடிநீரை சேகரித்து வைப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன்னர், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அதிகளவு நீரை பொதுமக்கள் பாத்திரங்களில் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதால், நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தற்போது, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் நடக்கிறது.ஒருசிலர் இன்னமும் அதிகளவு நீரை சேகரித்து தேக்கி வைக்கின்றனர். பலர் விநியோகத்தின் போது, குடிநீரை செடிகளுக்கு பாய்ச்சுவது, தெருவில் தெளிப்பது, கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சிஅதிகாரி ஒருவர் கூறுகையில், “”குழாய் உடைப்பு ஏற்பட்டால் தவிர குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. நீர் ஆதாரம் நல்ல நிலையில் உள்ளதால் பற்றாக்குறை ஏற்படாது. எனவே, குடிநீரை அதிகளவு சேகரித்து தேக்கி வைப்பதையும், விரயமாக்குதலையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,”என்றார்.