குடியிருப்புக்குள் புகுருந்த ஆட்டு கொட்டகை புழுக்கள்; நகராட்சி நிர்வாகம் அதிரடியால் மக்களுக்கு நிம்மதி
குன்னூர்: குன்னூர் நகரின் மையப் பகுதியில் ஆட்டு கொட்டகையிலிருந்து வெளியேறிய புழுக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், பெரும் பிரச்னை ஏற்பட்டது.
குன்னூர் நகராட்சி உட்பட்ட ராஜாஜி நகரில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் ஜெயசீலன் என்பவர், தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடு வளர்ந்து வருகிறார். இந்நிலையில், இந்த கொட்டைகளிலிருந்து கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான புழுக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தன. மேலும், இந்த பகுதியில் கடும் நுர்நாற்றம் வீசியதுடன், பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கொட்டகையை ஒட்டிய வீட்டினுள் இந்த புழுக்கள் ஊடுறுவியதால், அங்கு வசிக்கும் கமாலுதீன் என்பவரது 2 வயது மகன் இப்ராஹிமுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், ஆட்டு கொட்டகையை ஆய்வு செய்தனர். அப்போது, “கடந்த ஓராண்டாக, இங்கு உரம் தயாரிக்க சாணம் சேமித்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், இறந்த ஆட்டின் உடல்களும் கிடந்தது. இறந்த ஆடுகளை அகற்றாமல், அங்கேயே விடப்பட்டதால் அவற்றின் உடலிலிருந்து புழுக்கள் உற்பத்தியாகி, அவை பிற குடியிருப்புகளுக்குள் பரவியுள்ளன’ என்பது தெரியவந்தது.
இதன் பின்<, துப்புரவு ஊழியர்களை கொண்டு கொட்டகையிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் உரம் அகற்றப்பட்டது.
இந்த உரத்தை அகற்றும் போது, அப்பகுதியில் கடும் நுர்நாற்றம் வீசியது. துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும், அப்பகுதியை கடந்த சென்றவர்களுக்கும் வாந்தி ஏற்பட்டது.
நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியை முழுவதும் தூய்மைப்படுத்தி, “பிளீச்சிங் பவுடர்’ மற்றும் பூச்சி கொல்லி மருந்தை தெளித்தனர்.
இது குறித்து சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், “”குடியிருப்புகளிடையே சுகாதாரமற்ற முறையில் கொட்டகை அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் இப்பகுதியில் யாரும் ஈடுபட கூடாது. கொட்டகைகளை குடியிருப்பு இல்லாத பகுதிகளில் அமைக்க வேண்டும்,” என்றார்.