தினகரன் 23.09.2010
குத்தம்பாக்கம் திடக்கழிவு திட்டம் நிலம் கையகப்படுத்த கருத்து கேட்பு கூட்டம்
பூந்தமல்லி, செப். 23: குத்தம்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு, 100 ஏக்கர் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
அம்பத்தூர், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, போரூர், பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக சேமிப்பதற்கு பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, குத்தம்பாக்கம் ஊராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலெக்டர் தலைமையில் குத்தம்பாக்கம் மக்களிடமும், நகராட்சி தலைவர்களிடமும் கருத்து கேட்க உத்தரவிட்டது.
அதன்படி, கருத்து கேட்பு கூட்டம் குத்தம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. குத்தம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து 2,000 பேர் தங்களது கருத்துகளை கூறினர். பலர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்தில், திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ், அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆசிஷ்குமார், திருவள்ளூர் மாவட்ட திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.