தின மணி 20.02.2013
குப்பை மற்றும் கழிவு நீரில் இருந்து உரம், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்ள் குறித்து மதுரையில் பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆலோசித்தனர்.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலைய கதிரியக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்திய அளவில் கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அணு ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், மாவட்டம்தோறும் பயணம் செய்து, தாங்கள் செயல்படுத்த உள்ள திட்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில், இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விஞ்ஞானி எஸ்பி.காலே கூறியது:
கதிரியக்கத் தொழில்நுட்பம் மூலம் ஒரு டன் குப்பையில் இருந்து 1.5 கிலோ எரிவாயு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கவும், கழிவுநீரை நன்னீராக மாற்றி பாசனத்திற்கு பயன்படுத்தவும் உரம் தயாரிக்கவும் முடியும்.
இவற்றிற்கு ஆகும் செலவுத் தொகையை, 2 ஆண்டுகளில் மீண்டும் பெற்றுவிடலாம். விவசாயிகளின் விளை பொருள்கள் வீணாவதை தடுக்க உதவும்தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியும்.
வீடுகளில் பயன்படுத்தக் கூடிய சுத்திகரிப்பு எந்திரங்களை எளிமையான முறையில் தயாரிக்க, சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கவும் திட்டங்கள் உள்ளன.
இதுபோனற தொழில் நுட்பங்களை, மதுரை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருண்சுந்தர் தயாளன், பயிற்சி ஆட்சியர் அரவிந்த், பாபா அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் டேனியல், செல்லப்பா, பிரீத்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.