குப்பையின் அளவுக்கு ஏற்ப தொட்டிகள் வைக்க முடிவு
கோவை மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் குப்பையின் அளவைக் கணக்கெடுத்து அதற்கேற்றவாறு குப்பைத் தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் தினமும் சுமார் 850 டன் குப்பைகள் சேருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனாலும் பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.
மேலும், குப்பைத் தொட்டிகளில் கட்டட இடிபாடுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் குப்பையின் அளவை மட்டும் நிர்ணயிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய மண்டலத்தின் ஒருசில வார்டுகளில் மட்டும் தினமும் சேரும் குப்பையின் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்ப தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறியது: கோவை மாநகராட்சிப் பகுதியில் இப்போது 1500க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் உள்ளன. இவற்றில் அரை முதல் 5 டன் குப்பைகள் வரை கொட்டப்படுகின்றன.
மத்திய மண்டலத்தில் ஒருசில வார்டுகளில் குப்பைகளைக் கணக்கெடுத்து நகரம் முழுவதும் அதற்கேற்ப குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும் என்றார்.
குப்பைத் தொட்டிகளிலும், குளக்கரைகளிலும் கட்டட இடிபாடுகள் கொட்டப்படுகின்றன. விரைவில் கட்டட ஒப்பந்ததாரர்கள், சிவில் என்ஜினீயர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதற்கென்று ஒவ்வொரு பகுதியிலும் தனியாக இடம் ஒதுக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.