குப்பையில்லா நகரமாக உதகையை மாற்ற வலியுறுத்தல்
உதகை நகரை குப்பையில்லா நகரமாக மாற்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, நகர்மன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
உதகை நகர்மன்றக் கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் நடைபெற்ற விவாதம்:
ஏ.ரவி (திமுக): காந்தல் பகுதி உதகை நகரிலேயே அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்ட பகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. குப்பைகள் கூட அகற்றப்படுவதில்லை.
சத்தியபாமா (நகர்மன்றத் தலைவர்): காந்தல் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைத்து நிரந்தர தீர்வு காண்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால திட்டம் என்பதால் நிறைவேற சிறிது காலமாகும். அதுவரை மாஸ் கிளீனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படும்.
கே.தம்பி இஸ்மாயில் (தேமுதிக): உதகை நகரப் பகுதியிலும் குப்பைகள்
அகற்றப்படுவதில்லை. இப்படியொரு நிலை இதுவரை இருந்ததில்லை.
ஜே.ரவிகுமார் (திமுக): உதகை நகர்மன்றத்தில் சுகாதார அலுவலர் பணியிடம் காலியாகி 6 மாதமாகியும் இதுவரை நிரப்பப்படவில்லை.
சத்தியபாமா: நகர்மன்ற ஆணையரே இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது சீசன் நேரமாக உள்ளதால் புதிய அலுவலரை நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
மாதவன் (அதிமுக): உதகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் முறையாக பணிபுரியாததாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. நகர்மன்ற ஆணையரும் கண்டு கொள்வதில்லை. ஆட்சியர் அலுவலகம் எதிரே பல லட்ச ரூபாய் செலவழித்து நடைபாதை அமைத்தும், டைல்ஸ் கற்களைப் பதித்தும் புதுப்பிக்கப்பட்ட பகுதிகள், வாகன நிறுத்துமிடங்களாக மாறிவிட்டன. இதைத் தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும்.
சம்பத் (அதிமுக): நகரில் கடந்த 4 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆவது குடிநீர் திட்டப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
ராமமூர்த்தி (நகர்மன்ற பொறியாளர்): பார்சன்ஸ்வேலியிலிருந்து உதகைக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் வெள்ளிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராகும். 3 ஆவது குடிநீர் திட்டப் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும்.
கே.தம்பி இஸ்மாயில் (தேமுதிக): உதகை நகரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளில் ஊழியர்கள் அக்கறையுடன் பணிபுரியாததால் சாக்கடைகளில் கழிவுகள் நிரம்பி அடைப்பு ஏற்படுகிறது. கூட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களை தொடர்ந்து 50 தீர்மானங்கள் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.