குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர்: குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் 3வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. தினமும் சுமார் 550 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. 831 பணியாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். போதிய ஆட்கள் இல்லாததால், ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் தேங்கி வருகின்றன. இதன் காரணமாக, மகளிர் சுய உதவிக்குழுவினரை, துப்புரவு பணியில் ஈடுபடுத்த, நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, 60 வார்டுகளிலும், மகளிர் குழுவினர், துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நபருக்கு தினக்கூலியாக 170 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தனை பேர், எவ்வளவு நாட்கள் வேலை செய்தனர் என அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர் அறிக்கை கொடுத்ததும், சம்பந்தப்பட்ட குழுவுக்கு மாதச்சம்பளம் காசோலையாக வழங்கப்படுகிறது.
ஆனால், பல்வேறு பிரச்னைகளால் ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் மலைபோல் தேங்கி, கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், மகளிர் குழு வருகை பதிவேட்டில், அனைத்து உறுப்பினர்களும் தினமும் வேலைக்கு வந்ததாகவும், “திறம்பட‘ பணியாற்றியதாகவும், பொய் கணக்கு காட்டி, குழுவை நிர்வகிப்பவர்கள், மக்கள் வரிப் பணத்தை லட்சக்கணக்கில் சுருட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சியில் இரண்டு மற்றும் மூன்றாவது மண்டல பகுதிகளில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்பட்டுள்ளது.
இதற்காக மண்டலத் தலைவர்கள், சுகாதாரக்குழுத் தலைவர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரிடம், மேயர் விசாலாட்சி, ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் 3வது மண்டல அலுவலகத்தில் மேயர் விசாலாட்சி தலைமையில் நடைப்பெற்றது. ஆணையர் செல்வராஜ், துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர் டெக்ஸ்வேல் முத்துசாமி மற்றும் 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. ஏற்கனவே உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூலியை உயர்த்தித் தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து மேயர் விசாலாட்சி பேசுகையில், திடக்கழிவு மேலாண்மை பணியை தனியார் மயமாக்குவது என்பது அரசு மேற்கொண்டுள்ள முடிவு என்பதை புரிந்துகொண்டு கவுன்சிலர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், 2வது மண்டலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் சுய லாபத்திற்காக, குப்¬பை அகற்றும் பணியை தனியாருக்கும் விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு சில கவுன்சிலர்களின் இச்செயல், அனைத்து கவுன்சிலர்களுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.