தினமலர் 05.01.2010
குப்பை அள்ள தானியங்கி லாரி சுகாதார சீர்கேட்டுக்கு ‘குட்பை‘
வால்பாறை : வால்பாறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த தானியங்கி குப்பை லாரி பயன் பாட்டிற்காக இயக்கப்படுகிறது.வால்பாறை நகராட்சி சார்பில் அள்ளப்படும் குப்பைக்கழிவுகள், கோழி மற்றும் இறைச்சிக்கழிவுகள் ஸ்டான்மோர் சந்திப்பில் உள்ள திறந்த வெளிக்குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் குடியிருப்பு இருப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். கல்லூரியின் எதிரில் குப்பைக்கிடங்கு இருப்பதால் மாணவர்கள் துர்நாற்றத்தால் படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், நகராட்சி சார்பில் குப்பைக்கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து எஸ்டேட் பகுதிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, குப்பைக்கிடங்கு விரிவு படுத்தும் பணியும், தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடக்கிறது.குப்பைகளை தரம் பிரித்து தானியங்கி லாரி மூலம் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகள் தரம்பிரிக்கும் அறைகளும், தடுப்புச்சுவரும் கட்டும் பணி நடந்துவருகிறது.வால்பாறை டவுன் பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து ஒரே வாகனத்தில் எடுத்து செல்லும் விதமாக தானியங்கி குப்பை லாரி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த லாரியை பொதுமக்கள் பயன் பாட் டிற்காக நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நகராட்சித்தலைவர் கணேசன், துணைத் தலைவர் ராஜதுரை துவக்கி வைத்தனர்.