தினமணி 04.10.2010
குப்பை கொட்டுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர்மன்றம் முடிவு
அரக்கோணம், அக். 3: அரக்கோணம் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணம் நகரமன்றத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரமன்ற தலைவர் விஜயராணி கன்னைய்யன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், “சில்வர்பேட்டையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் 2005 முதல் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதி மக்களால் இரண்டு நாட்களாக குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே நகரத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.
இதனால், நகரில் சுகாதார சீர்கேடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் நகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்போர் மீது மாவட்ட ஆட்சியர், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்து, உடனடி நடவடிக்கை கடும் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.