தினமணி 14.11.2009
குப்பை கொட்ட மாற்று இடம்
புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் உருவாகும் குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு அப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நகரப் பகுதியில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.
இக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை இனி அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், “”மாற்று இடத்தில் குப்பை கொட்டுவதற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தேர்வு செய்யப்பட்ட மாற்று இடத்தில் குப்பை கொட்டப்படும்.
கருவடிக்குப்பம் பகுதியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமன்றி விமானப் போக்குவரத்து துறையின் சார்பிலும் எதிர்ப்பு வந்துள்ளது. அந்த நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இப் பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்ட முடியாது. அதனால் மாற்று இடத்தில் குப்பை கொட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.
மாவட்ட ஆட்சியர் ராகேஷ்சந்திரா, உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் குப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு உறுப்பினர் டி. முருகன் உள்ளிட்டோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.